தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில், தவத்துறை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தவத்துறை (இன்றைய நாளில் லால்குடி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்சப்தரிஷீஸ்வரர்
இறைவி பெயர்மகாசம்பத்கெளரி
பதிகம்அப்பர் (6-71-11)
எப்படிப் போவது திருச்சிராப்பள்ளியில் இருந்து அரியலூர் செல்லும் சாலை வழியில் லால்குடி உள்ளது. திருச்சி மற்றும் அரியலூரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து ஊருள் செல்லும் சாலையில் நேரே சென்று ரயில் பாதையைக் கடந்து சுமார் 2 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்
லால்குடி
லால்குடி அஞ்சல்
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621601

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தவத்துறை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகப் பாடலில் "துறை" என்று வழங்கும் தலங்களை அப்பர் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழில்
குயிலாலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும்  குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

பொழிப்புரை :

கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் தவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம் .