தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

நடனபுரீஸ்வரர் திருக்கோவில், தண்டந்தோட்டம்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தண்டந்தோட்டம்
இறைவன் பெயர்நடனபுரீஸ்வரர்
இறைவி பெயர்சிவகாமசுந்தரி
பதிகம்சுந்தரர் (7-12-2)
எப்படிப் போவது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ராகு ஸ்தலம் திருநாகேஸ்வரத்திலிருந்து புண்டரீகபுரம், முருக்கங்குடி வழியாக தண்டந்தோட்டம் தலம் சென்றடையலாம். திருநாகேஸ்வரத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் தலத்திலிருந்தும் தண்டந்தோட்டம் செல்ல சாலை வசதி உள்ளது..
ஆலய முகவரி அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோவில்
தண்டந்தோட்டம்
தண்டந்தோட்டம் அஞ்சல்
வழி முருக்கங்குடி
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612202

ஆலயம் காலை 9 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு:
நடராஜ குருக்கள்: தொலைபேசி: 0435 2446019,
கைபேசி: 09443070051

தண்டந்தோட்டம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

அண்டத்து அண்டத்தின் அப்புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை
கொண்டல்நாட்டுக் கொண்டல் குறுக்கைநாட்டுக் குறுக்கையே.

பொழிப்புரை :

இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று 
நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் தண்டந்தோட்டம், 
தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த 
கழிப்பாலை கடற்கரை, கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல், 
குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை என்பவை .

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல் பெற்ற வைப்புத் தலங்களில் ஒன்று தான் தேவாரப் பதிகத்தில் தண்டந்தோட்டம் என்று குறிப்பிடப்படும் சோழ நாட்டுத் தலம். நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் நடனபுரீஸ்வரர் திருக்கோவிலும் ஒன்றாகும். கயிலாயத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்ற போது வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. பூபாரத்தை சமம் செய்வதற்காக சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். அதனால் மனம் வருந்திய அகத்தியருக்கு அவர் விரும்பும் இடங்களில் எல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தருவதாக அருள் பாலித்தார். அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபாட்டில் மகிழ்ந்து சிவபெருமான் கார்த்தியாயனி சமேத கல்யாணசுந்தரராய் அகத்தியருக்கு காட்சி கொடுத்தருளினார்.

கோவில் அமைப்பு: ஆலயம் தெற்கு நோக்கி உள்ள ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ளது முன் மண்டபம். இங்கு நேரே தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும், இடப்புறம் கிழக்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் உள்ளது. நடனபுரீஸ்வரர் உயர்ந்த திருமேனி எழிலுடன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தில் வலம் வரும்போது கோஷ்டத்தில் 12 ராசி மண்டலங்களுக்கு மேலே பீடமிட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.. இவர் ராசி மண்டல குரு எனப் போற்றப்படுகிறார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கினால், 12 ராசிக்காரர்களின் சகல தோஷங்களையும் போக்கியருள்வார் என்பது ஐதீகம் மேற்குப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஷண்முகர், துர்க்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

அகத்தியருக்குக் காட்சி கொடுத்த இறைவன் அவருக்கு இரண்டு வரங்களையும் கொடுத்தார். அதன்படி இத்தலத்திற்கு வந்த நடனபுரீஸ்வரரை வழிபட்டால் திருமணம் தடைபடுகிறவர்களுக்கு திருமணத் தடைகள் விலகும் என்றும், இறைவனை தரிசிப்பதால் தங்கள் வாழ்விலுள்ள சகல தடைகளும் தீக்கி கயிலாயத்தை தரிசித்தால் ஏற்படும் பலன் கிட்டும் என்றும் என்று அருள் பாலித்தார். ஆகையில் இத்தலம் திருமணத் தடை நீங்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இங்கு தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் அகஸ்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் விசாக நட்சரத்தில் ஶ்ரீகார்த்தியாயிணி சமேத கல்யாண சுந்தரருக்கு சிவாகம முறைப்படி திருக்கல்யாணம் தடைபெறுகிறது.

பல்லவர் காலத்து 11 செப்பேடுகள் தண்டந்தோட்டத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்த தண்டந்தோட்டம் செப்பேடுகள் புகழ் மிக்கவை. இந்த ஊர் பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை இந்தச் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. இந்தச் செப்பேடுகள், 8-ம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்டு வந்த இரண்டாவது நந்திவர்மன் பற்றிக் கூறுகிறது. காஞ்சீபுரத்திலுள்ள ஶ்ரீவைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியவனை இவனே என்றும் அறிய முடிகிறது. வேத விற்பன்னர்களுக்கு நிலம் வழங்கியதைப் பற்றியும் இந்த கலவெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

1965-ஆம் வருடத்தில், தண்டந்தோட்டத்துக்கு வந்த காஞ்சி மகாபெரியவா, அங்கே தங்கி சாதுர்யமாஸ்ய விரதம் மேற்கொண்டு பூஜித்தார் என்று ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர். இத்தலத்தில் பத்தூர். சிவபுரம் ஆகிய தலங்களில் இருந்ததைப் போல பிரமாண்டமான நடராஜர் விக்கிரகம் இங்கு இருந்ததாம். 1972-ம் ஆண்டு வாக்கில் இத்தலத்திலுள்ள உள்ள நடராஜப் பெருமானின் ஐம்பொன் திருமேனி திருடு போய் விட்டது. தண்டந்தோட்டம் நடராஜர் கிடைக்காமல் போக, சிறிய, அழகிய நடராஜரின் விக்கிரகத் திருமேனியை காஞ்சி மகா பெரியவாளே கொடுத்து இத்தலத்தில் பூஜித்து வரப் பணித்ததாக ஆலய நிர்வாகிகள். கூறுகின்றனர்.

தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

மூலவர் கருவறை விமானம்

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி

அம்பாள் கருவறை விமானம்

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதி

விநாயகர் சந்நிதி

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்

மூலவர் நடனபுரீஸ்வரர்

அம்பாள் சிவகாமசுந்தரி

முருகப் பெருமானின அழகிய சிற்பம்