தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

கைலாசநாதர் திருக்கோவில், தண்டங்குறை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தண்டங்குறை (இன்றைய நாளில் தண்டாங்கோரை என்று பெயர்)
இறைவன் பெயர்கைலாசநாதர்
இறைவி பெயர்சர்வலோகஜனனி
பதிகம்சுந்தரர் (7-12-2)
எப்படிப் போவது தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் மானாங்கோரைக்கு அடுத்துத் தண்டாங்கோரை தலம் உள்ளது. இதே சாலையில் கும்பகோணத்தில் இருந்து வரும்போது அய்யம்பேட்டையை அடுத்து 'தண்டாங்கோரை உள்ளது. தஞ்சாவூரிலிருந்நு 13 கி.மீ. தொலைவு..
ஆலய முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
தண்டாங்கோரை
தண்டாங்கோரை அஞ்சல்
வழி பசுபதிகோவில்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614206

தண்டங்குறை (தண்டாங்கோரை) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

அண்டத்து அண்டத்தின் அப்புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை
கொண்டல்நாட்டுக் கொண்டல் குறுக்கைநாட்டுக் குறுக்கையே.
பொழிப்புரை :
இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று 
நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள் தண்டந்தோட்டம், 
தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த 
கழிப்பாலை கடற்கரை, கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல், 
குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை என்பவை .

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல் பெற்ற வைப்புத் தலங்களில் ஒன்று தான் இன்றைய நாளில் தண்டாங்கோரை என்றும், தேவாரப் பதிகத்தில் தண்டங்குறை என்றும் குறிப்பிடப்படும் சோழ நாட்டுத் தலம். ஊரின் நடுவில் அமைந்துள்ள இக்கோயில் தெற்கு திசையில் ஒரு முகப்பு வாயிலுடன் உள்ளது. இவ்வாயிலின் மேற்புறம் ரிஷப வாகனத்தில் அமர்ந்தவாறு சிவன், பார்வதி, வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அமர்ந்த முருகர், மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்த விநாயகர் ஆகியோரின் சுதை வடிவ சிற்பங்களைக் காணலாம். முகப்பு வாயில் வழி உள் நுழைந்தால் உள்ள முன் மண்டபத்தில் எதிரில் அம்பாள் சர்வலோகஜனனியின் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கிய கைலாசநாதர் சந்நிதி உள்ளது. இவை தவிர வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, சண்டிகேசுவரர் சந்நிதி, நந்தி மண்டபம், நவக்கிரக சந்நிதி ஆகியவை இருக்கின்றன. தாமரை வடிவ பீடத்தில் நவக்கிரக சந்நிதி அமைந்திருப்பது சிறப்பாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மண வாழ்க்கையில் நிறைவு இல்லாதவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இந்தக் கோயிலில் உறையும் அம்பாளையும், சுவாமியையும் மனதார வழிபட்டால் அனைத்து இன்பங்களும் பெறலாம்.

சர்வலோகஜனனி சமேத கைலாசநாதர் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி நடைபெற்றது.

தண்டங்குறை கைலாசநாதர் ஆலயம் புகைப்படங்கள்

கும்பாபிஷேகத்திற்கு முன் முகப்பு வாயில்

கும்பாபிஷேகத்திற்குப் பிறகு முகப்பு வாயில்

கும்பாபிஷேகத்திற்கு முன் கருவறை விமானம்

தட்சிணாமூர்த்தி சந்நிதி

விநாயகர் சந்நிதி

கஜலட்சுமி சந்நிதி

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்

தாமரை பீடத்தில் நவக்கிரக சந்நிதி

மூலவர் கைலாசநாதர்