தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

பரஞ்சோதி ஈஸ்வரர் திருக்கோவில், தஞ்சாக்கை


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தஞ்சாக்கை (இன்றைய நாளில் தஞ்சாக்கூர் என்று பெயர்)
இறைவன் பெயர்பரஞ்சோதி ஈஸ்வரர்
இறைவி பெயர்ஞானாம்பிகை
பதிகம்சுந்தரர் (7-12-9)
எப்படிப் போவது மதுரை - மானாமதுரை சாலையில் உள்ள திருப்பாச்சேத்தியிலிருந்து 5 கி.மி. தொலைவில் தஞ்சாக்கூர் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு பரஞ்சோதி ஈஸ்வரர் திருக்கோவில்
தஞ்சாக்கூர்
தஞ்சாக்கூர் அஞ்சல்
வழி திருப்பாசேத்தி
மானாமதுரை வட்டம்
சிவகங்கை மாவட்டம்
PIN - 630610

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும், ஆலய குருக்கள் வீடு அருகிலுள்ளது

தஞ்சாக்கை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்.

தழலு மேனியன் தையல் ஓர் பாகம் அமர்ந்தவன்
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம்
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே.

பொழிப்புரை :
தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும், மங்கையை ஒரு பங்கில் 
விரும்பி வைத்துள்ளவனும், தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை 
அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும், கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும் 
ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள் - சோற்றுத்துறை, பழனம், பாம்பணி, 
பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கை என்பவை .

கோவில் அமைப்பு: ஆலயம் சுற்று மதிற்சுவர் இன்றி காணப்படுகிறது. கருவறையும், அதன் முன் ஒரு மண்டபத்துடனும் உள்ள இந்த ஆலயத்தில் இறைவன் பரஞ்சோதி ஈஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், இறைவி ஞானாம்பிகை தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கிழக்கு திசையில் கோபுரம் கட்ட திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நின்று போய் உள்ளது. இந்த வாயில் வழி உள் நுழைந்தால் கொடிமரமும், நந்தியும் இருக்கக் காணலாம். கொடிமரம், பலிபீடத்திற்கு வலதுபுறம் சற்றுத் தள்ளி நவக்கிரக சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் அழகுடன் காணப்படுகின்றன. மூலவர் சந்நிதி வாயிலுக்கு வெளியே இடதுபுறம் விநாயகர் உள்ளார். வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. வேறு சந்நிதிகள், சிலா மூர்த்தங்கள் எதுமில்லை.

பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் வேண்டுகோளின் படி இறைவன் இத்தலத்தில் அவர்களுக்கு பரஞ்சோதி தரிசனம் காட்டி அருளியுள்ளார். பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன், இந்திராணி, ராமர், லட்சுமணர், அனுமார், அகத்தியர், கவுதம முனிவர் ஆகியோரும் இத்தலத்தில் இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

தஞ்சாக்கை (தஞ்சாக்கூர்) பரஞ்சோதி ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

இறைவன் சந்நிதி முன் நந்தி, பலிபீடம்

இறைவன் சந்நிதி வாயில் துவாரபாலகர்கள்

அர்த்த மண்டபத்தில் விநாயகர்

மூலவர் பரஞ்சோதி ஈஸ்வரர்

கொடிமரம், நந்தி

ஆலயத்தின் தோற்றம்