தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

திருலோகநாதசுவாமி திருக்கோவில், தக்களூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தக்களூர்
இறைவன் பெயர்திருலோகநாதசுவாமி
இறைவி பெயர்தர்மசம்வர்த்தினி
பதிகம்அப்பர் (6-2-1, 6-51-8, 6-70-3), சுந்தரர் (7-12-1)
எப்படிப் போவது காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில் உள்ளது. பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் சற்றே உள்ளடங்கி உள்ளது. விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு திருலோகநாதசுவாமி திருக்கோவில்
தக்களூர்
திருநள்ளாறு அஞ்சல்
காரைக்கால் வட்டம்
புதுச்சேரி மாவட்டம்
PIN - 609607

ஆலயம் தினந்நோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: நாகராஜ செட்டியார் (பரம்பரை ஸ்தானிகர்), கைபேசி: 94865 09926

தக்களூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்கள்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 2-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் தில்லை சிதம்பரம் தலத்திற்குரிய பதிகமாகும்.

மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்குமிட மறியார் சால நாளார்
தருமபுரத் துள்ளார் தக்களூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொழிப்புரை :

பொலிவு தரும் வெண்ணீறு அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, நம்பெருமானார் வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ச்சியை உடைய பெருந்தெருக்களை உடைய மயிலாப்பூர், மருகல், கொங்குநாட்டுக் கொடுமுடி, குற்றாலம், குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம், தக்களூர் என்ற திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்.

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற்று உள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்
சாந்தை அயவந்தி தங்கினார் தாம்
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்
நாகேச்சரத்து உள்ளார் நாரையூரார்
வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார்
வீழிமிழலையே மேவினாரே.

பொழிப்புரை :
பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் 
நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து 
என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம் , நாரையூர் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார் .

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது..

இடைமது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :
இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர்இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது..

வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந் தான்இடங்கொண்டது கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க்கும் வளர் மருகன்னாட்டு மருகலே.

பொழிப்புரை :
கூற்றுவனை, அவன் உயிரற்று விழுமாறு காலால் உதைத்த கயிலாயநாதனும், நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக்கொண்ட ஊர் திருக்கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழைகள் காய்க்கின்ற, செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல் என்பவையாகும்

கோவில் அமைப்பு: ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள் சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிராகாரம். காணலாம். இதில் நநதி, பலிபீடம் உள்ளன. கொடிமரம் இல்லை. இவற்றைக் கடந்து அடுத்துள்ள உள் வாயில் வழியே சென்று இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருலோகநாதசுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். ஆலயம் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.

தக்களூர் திருலோகநாதசுவாமி ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்

முகப்பு வாயில் கடந்து உள் தோற்றம்

நந்தி, பலிபீடம்

தர்மசம்வர்த்தினி அம்பாள் சந்நிதி நுழைவாயில்

தர்மசம்வர்த்தினி அம்பாள்

திருலோகநாதசுவாமி சந்நிதி நுழைவாயில்

இறைவன் கருவறை விமானம்

கோஷ்டத்தில் தட்ணிசாமூர்த்தி

திருலோகநாதசுவாமி