தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

திவ்யஞானேஸ்வரர் திருக்கோவில், சடைமுடி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்சடைமுடி (தற்போது கோவிலடி என்றும் திருப்பேர் நகர் என்றும் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்திவ்யஞானேஸ்வரர்
இறைவி பெயர்அகிலாண்டேஸவரி
பதிகம்அப்பர் (6-70-3)
எப்படிப் போவது திருக்கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி - கல்லணை - திருச்சி சாலையில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 9 கி.மீ தொலைவில் கோவிலடி உள்ளது. கோவிலடியிலுள்ள வைணவ திவ்யதேசமான அப்பக்குடத்தான் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 2.5 கி.மீ தொலைவில் இந்த வைப்புத்தலக் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு திவ்யஞானேஸ்வரர் திருக்கோவில்
கோவிலடி
கோவிலடி அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613105
Sadaimudi temple route map

கோவிலடி அப்பக்குடத்தான் ஆலயத்தில் இருந்து சடைமுடி ஆலயத்திற்குச் செல்லும் வழி. Map courtesy by: Google Maps.

சடைமுடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :

இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர்இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம்பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் .

திருநாவுக்கரசர், தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ள சடைமுடி என்ற ஊர் இப்பொழுது கோவிலடி என வழங்குகின்றது. இத்தல கல்வெட்டுகளில் இறைவன் திருச்சடை முடியுடைய மாகாதேவர் என்று குறிப்பிடப்படுகிறார். பழங்காலத்தில் இவ்வூர் திருப்பேர் நகர் என்று பெயர் பெற்றிருந்தது. இத்தலத்திலுள்ள ஈசன் கோவில் பழைய திருப்பேர் நகரத்தின் ஒரு பகுதியில் அமைந்திருந்தது என்பதும், அவ்விடம் திருப்புறம் என்று பெயர் பெற்று இருந்தது என்பதும் சாசனங்களால் புலனாகிறது. திருப்பேர் நகரம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற அப்பக்குடத்தான் என்ற பெருமாள் கோயிலையும் உள்ளடக்கி இருந்தது.

சிவாலயமாகிய திருப்புறம் இருந்த நகர்ப் பகுதி திருப்பேர்ப்புறம் என வழங்கிற்று. இக்காலத்தில் இக்கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

பண்டைத் தமிழ் மன்னர்கள் காலத்தில் ஒரு பெரும்போர் நிகழக் கண்டது திருப்பேர்ப்புறம் என்ற இவ்வூர். கோச்செங்கட்சோழன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர நாட்டு மன்னனை வென்று சிறை பிடித்த களம் திருப்பேர்ப் புறமாகும். எனவே சைவ, வைணவக் கோயில்கள் இருப்பதால் சிறப்புற்ற திருப்பேர் என்ற ஊர் சரித்திர சம்பந்தமும் உடையதென்று தெரிகின்றது.