தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

அகத்தீஸ்வரர் திருக்கோவில், கூழையூர் (குழையூர்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கூழையூர் (இன்றையநாளில் குழையூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்அகத்தீஸ்வரர்
இறைவி பெயர்அபிராமி
பதிகம்அப்பர் (6-70-9)
எப்படிப் போவது (1) மயிலாடுதுறையிலிருந்து கோமல் செல்லும் பேருந்தில் பெரட்டக்குடி நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். (2) கும்பகோணம் - பொறையாறு சாலையில் (வழி - கோமல்) பெரட்டக்குடி வந்தும் வரலாம். தேரழுந்தூரிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் வீரசோழன் ஆற்றின் வடகரையில் இத்தலம் உள்ளது. தேரழுந்தூர் மற்றும் கோமல் அருகிலுள்ள ஊர்களாகும்
ஆலய முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்
குழையூர் அஞ்சல்
வழி கோமல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609805

இவ்வாலயம் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குத்தங்குடி மற்றும் கூழையூர் இரண்டு கோவில்களையும் பட்டப்பா குருக்கள் என்பவர் கவனித்துக் கொள்கிறார். அவருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து இக்கோவில்களை தரிசிப்பது நல்லது.

பட்டப்பா குருக்கள் கைபேசி எண்: 9943185352

கூழையூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகம் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி	(6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை		
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, 
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, 
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், 
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

கோவில் அமைப்பு: மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடனும், ஒரு பிராகாரத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் கடந்து உள்ளே நுழைந்தவுடன் நேரே முன் மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தினுள் தெற்கு நோக்கி அம்பாள் அபிராமி சந்நிதி அமைந்துள்ளது. நேரே மூலவர் சந்நிதி உள்ளது. மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் சந்நிதிக்கு முன் நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. மேற்குப் பிராகாரத்தில் இரட்டை விநாயகருடன் கூழையர் (அகத்தியர்) உள்ளார். அதையடுத்து வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதியும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதியும் உள்ளது. பைரவரும் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இந்தக் கோயில் வளாகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தனிக்கோவில் இறைவன் கோவிலுக்கு வலதுபுறம் அமைந்துள்ளது.

கைலாயத்தில் சிவபெருமானுக்கு திருமணம் நடந்தபோது அநேகம் பேர் அங்கு கூடியிருந்தபடியால், பூமியின் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் போய்விட்டது. அதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென் பகுதிக்கு செல்லும்படி சிவபெருமான் கேட்டுக்கொள்ள, அகத்தியரும் தென் பகுதிக்கு வந்து உலகம் சமநிலை அடையச் செய்தார் என்பது புராணம். அப்படி அகத்தியர் தென் பகுதியை சீர்படுத்துவதற்காக இமய மலையிலிருந்து தென் பொதிகை நோக்கி சென்ற போது வழியில் இருந்த இந்தக் கோயிலில் தங்கி இறைவனை வழிபட்டதாக வரலாறு. அகத்தியர் வில்வலன் வாதாபியின் சூழ்ச்சியால் புலால் உண்டபாவந்தீர தேரழுந்தூர் வேதபுரீசுவரை வழிபட வந்தபோது இத்தலத்தில் தங்கிப் பூசித்த தலம் என்றும் கூறப்படுகிறது. கூழையர் என்றால் அகத்தியரைக் குறிக்கும். கூழையர் (அகத்தியர்) வழிபட்டதால் இத்தலம் கூழையூர் என்று பெயர் பெற்றது.

இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

கூழையூர் அகத்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

மதிற்சுவருடன் முகப்பு வாயில்

முன் மண்டபம் நுழைவாயில்

நந்தி, பலிபீடம்

இரட்டை விநாயகர், கூழையர் (அகத்தியர்)

மூலவர் கருவறை விமானம்

அம்பாள் கருவறை விமானம்

வள்ளி தெய்வானையுடன் முருகர்

மூலவர் சந்நிதி

மூலவர் அகத்தீஸ்வரர்

அம்பாள் சந்நிதி

அம்பாள் அபிராமி

ஶ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில்