தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில், கூந்தலூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கூந்தலூர்
இறைவன் பெயர்ஜம்புகாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்ஆனந்தவல்லி
பதிகம்அப்பர் (6-70-9)
எப்படிப் போவது (1) கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலையில் எரவாஞ்சேரிக்கு அருகில் சாலை ஓரத்திலேயே கூந்தலூர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கூந்தலூர் உள்ளது. கருவிலிகொட்டிட்டை என்ற பாடல் பெற்ற தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு ஜம்புகாரண்யேஸ்வரர் திருக்கோவில்
கூந்தலூர், கூந்தலூர் அஞ்சல்
வழி எரவாஞ்சேரி
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609501

இவ்வாலயம் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கூழையூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகம் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி	(6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை		
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, 
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, 
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், 
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

koonthalur location map

கூந்தலூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
May by: Google

தலப்பெயர் காரணம்: பண்டைய காலத்தில் நாவல் மரங்கள் அடர்ந்து இருந்த வனத்திடையே அமைந்த திருத்தலமாகியதால் ஆலய இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் வனத்தில் நரி வழிபட்டதாலும் ஜம்புகாரண்யேஸ்வரர் என ஈசன் அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. "ஜம்பு" என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப் பொருள்படும். மேலும், ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள தீர்த்தத்தில் சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால், ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் என வழங்கப்படுகிறது. அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கூந்தலூர் ஒரு தேவார வைப்புத் தலமாக இருந்தாலும் இத்தலம் கூந்தலூர் முருகன் கோவில் என்று தான் இப்பகுதி மக்களால் அறியப்படுகிறது.

ரோமரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து கூந்தலூர் ஆலய சிவபெருமான் அருளைப் பெற்றார். அவ்வாறு அவர் தவம் செய்து வரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெற தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் அளித்து வந்தார். ஒரு சமயம் சிவனாரின் திருவிளையாடல் காரணமாக, அவரின் தாடி வழியே பொன் வருவது நின்று விட்டது. ரோமரிஷி சித்தர் உடனே, தனது தாடியை நீக்கிவிட்டு, நீராட மறந்து ஈசனை வழிபட திருக்கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார். நீராடாமல் சிவனை தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த சிவ சித்தரான ரோமரிஷி சித்தரை, விநாயகரும், முருகனும் விரைந்து வந்து அவரை கோவிலுக்கு உள்ளே வர விடாமல் தடுத்தனர். ரோமரிஷி சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனும் தன் தரிசனத்தை ஆலயத்திற்கு வெளியே காட்டி பறத்தூய்மையை விட அகத்தூய்மையே இன்றியமையாதது என மற்றவர்க்கும் உணர்த்தி ரோமரிஷிக்கு அருள் புரிந்தார். என தல வரலாறு கூறுகிறது.

திருப்புகழ் தலம்: முருகப்பெருமான் ரோமரிஷி முனிவரைத் தடுக்க வந்ததால் அவரின் சந்நிதி கோவிலின் முன் புறம் அமைந்துள்ளது. இத்தல முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடாப்பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. முருகர் ஒரு திருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மயிலின் முகம் வலப்பகம் உள்ளது. சூரசம்ஹாரத்திற்கு முன்பே முருகனுக்கு உள்ள மயில் இது என்பர். இது தேவ மயில் என்றும் கூறுவர்.

கோவில் அமைப்பு: ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு நுழைவு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் ஜம்புகாரண்யேஸ்வரர் இழக்கு தோக்கியும், அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு தோக்கியும் அருள் புரிகின்றனர். ஜம்புகாரண்யேஸ்வரர் நீண்டு உயர்ந்த பாணத்துடன் காட்சி அளிக்கிறார். கருவறை பிராகாரம் வலம் வரும்போது கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை அம்மன் ஆகியோரைக் காணலாம். சண்டிகேஸ்ரருக்கும் தனி சந்நிதி உள்ளது., பல்லவர் கால 16 பட்டை தாரா லிங்கத்தை பாலசுப்ரமணியர் சந்நிதி அருகே காணலாம். ஆலயத்தின் தீர்த்தங்களாக சீதா தீர்த்தமும், குமார தீர்த்தமும் உள்ளன. சனி செவ்வாய் கிரகப் பாதிப்புகளுக்கு இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.


கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

மூலவர் ஜம்புகாரண்யேஸ்வரர்

அம்பாள் ஆனந்தவல்லி

ரோமரிஷி