தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

குருக்கேத்திரம் (குருஷேத்திரம்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்குருக்கேத்திரம் (இன்றைய நாளில் குருஷேத்திரம் என்று பெயர்)
இறைவன் பெயர்
இறைவி பெயர்
பதிகம்சுந்தரர் (7-78-6)
எப்படிப் போவது புதுடில்லி - அம்பாலா - சண்டிகர் பாதையில், புதுடில்லியில் இருந்து வடக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும், சண்டிகரில் இருந்து தெற்கே சுமார் 110 மி.மீ. தொலைவிலும் குருஷேத்திரம் உள்ளது.
ஆலய முகவரி குருஷேத்திரம், குருஷேத்திரம் மாவட்டம், ஹரியானா மாநிலம்
PIN - 132118.

குருக்கேத்திரம் (குருஷேத்திரம்) வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 78-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருக்கேதாரம் தலத்திற்குரிய பதிகமாகும்.

தளி சாலைகள் தவம் ஆவது தம்மைப் பெறில் அன்றே 	
குளியீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி
தெளியீர் உளம் சீ பர்ப்பதம் தெற்கு வடக்கு ஆகக்
கிளிவாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே

பொழிப்புரை :		

இந்த உலகில் வாழ்வோரே, தேவகோட்டங்கள் தவச்சாலைகளாய் நின்று பயன் தருவது மக்கள் அவ்விடங்களை அடைந்ததால் அன்றோ? இதனை உணர்ந்து; கொண்டு, தெற்கென்னும் திசை கிடைக்க, கோதாவரி, குமரி` என்னும் தீர்த்தங்களிலும், வடக்கென்னும் திசைகிடைக்க, அழகிய குருக்கேத்திரத்தில் உள்ள தீர்த்தத்திலும் சென்று நீராடுங்கள்; அவ்வாறே தெற்கில் சீபர்ப்பதத்தையும், வடக்கில் கிளிகள், பழத்தைக் கீறி உண்ணுகின்ற திருக்கேதாரத்தையும் சென்று வணங்கித் துதியுங்கள்.

பாரத நாட்டின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம் ஒரு புண்ணிய பூமி. இங்கு தான் பஞ்ச பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் 18 நாட்கள் யுத்தம் நடைபெற்றது. இறுதியில் பாண்டவர்கள் வெற்றி பெற்ற புண்ணிய பூமி. இதுவாகும். இத்தலத்திலுள்ள பிரம்மசரோவர் என்ற தீர்த்தம் 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது. தீர்த்த விசேஷம் உள்ள இடம் குருஷேத்திரம். மத்சய புராணத்திலும், பத்ம புராணத்திலும் இங்குள்ள பிரம்மசரோவர் என்ற தீர்த்தத்தின் மகிமையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகனத்தின் போது இந்த தீர்த்தத்தில் மூழ்கி நீராடுவர்கள் 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள் என்று இந்த இரண்டு புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்னரால் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்ட பகவத் கீதை பிறந்த பெருமை குருஷேத்திரத்திற்கு உண்டு. கீதோபதேசம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அருச்சுனன் தன் அம்பினால் (பாணத்தால்) உண்டாக்கிய தீர்த்தக் கிணறு "பாண கங்கா" என்ற பெயரில் இத்தலத்தில் உள்ளது. குந்தி தேவி வழிபட்ட சிவாலயமும் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.

குருஷேத்திரம் வைப்புத் தலம் புகைப்படங்கள்

குருஷேத்திரம் செல்லும் பாதையிலுள்ள நுழைவு வாயில்

பிரம்மசரோவர் தீர்த்தம்

பிரம்மசரோவர் தீர்த்தம் - மற்றொரு தோற்றம்

ரதத்தில் அர்ஜுனன், பார்த்தன் - பிரம்ம தீர்த்தக் கரையிலுள்ள சிற்பம்

கீதோபதேசம் நடந்ததாக கூறப்படும் பழமையான ஆலமரம்

பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்ட கீதோபதேசக் காட்சி

பழமையான சிவாலயம்

கருவறையில் சிவலிங்கம்

பீஷ்மர் கோவில்