தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சுக்ரீஸ்வரர் திருக்கோவில், குரக்குத்தளி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்குரக்குத்தளி (இன்றைய நாளில் சர்க்கார் பெரியபாளையம் என்று பெயர்)
இறைவன் பெயர்சுக்ரீஸ்வரர்
இறைவி பெயர்ஆவுடைநாயகி.
பதிகம்சுந்தரர் (7-47-2)
எப்படிப் போவது திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிபாளையம் 4 ரோடைக் கடந்து சர்க்கார் பெரியபாளையம் உள்ளது. கூலிபாளையம் 4 ரோட்டில் இடதுபுறம் திரும்பி சற்று தொலைவு சென்று வலதுபுறம் செல்லும் சாலையில் சென்று இக்கோவிலை அடையலாம். சர்க்கார் பெரியபாளையம் அடைந்து, அங்கிருந்தும் இக்கோவிலுக்குச் செல்லலாம். திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் சர்க்கார் பெரிய பாளையம் உள்ளது
ஆலய முகவரி அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோவில்
சர்க்கார் பெரியபாளையம்
எஸ் பெரியபாளையம் அஞ்சல்
பெருந்துறை வட்டம்
ஈரோடு மாவட்டம்
PIN - 641607.

Photo courtesy: www.facebook.com/Sukreeswarar Temple

குரக்குத்தளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 47-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனல் ஏந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே.

பொழிப்புரை :

கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத்தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே, மூப்படையாதவனே, வானத்தில் திரிபவனே, தேவர்க்குத் தலைவனே, வாய்மூரில் மணவாளக் கோலம் உடையவனே, சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே, அழகனே, எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு, இரவில் புறங்காட்டில் ஆடுகின்றவனே, உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய்..

நொய்யல் ஆற்றின் வடகரையில் சுமார் 400 அடி நீளம், 400 அடி அகலத்துடன் கிழக்கு நோக்கி ஒரு கோபுரம் மற்றும் பிராகாரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டதால் குரக்குத்தளி என்று இத்தலம் பெயர் பெற்றது. அழகிய கற்றளியான இக்கோவில் தொல்பெருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக சுக்ரீஸ்வரர் என்று பெயருடன் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். அம்பாள் ஆவுடைநாயகி தெற்கு நோக்கி உள்ளாள். சுக்ரீவன் வழிபட்ட தலம் என்பதற்கேற்ப ஆலயத்தின் தென்புறச் சுவரில் குரங்கு ஒன்று சிவலிங்கத்தை வழிபடும் உருவம் உள்ளது.

பழங்காலத்தில் இத்தலம் குறும்பர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க சுந்தரர் தனது பதிகத்தில் "கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய்" எனப் பாடியுள்ளார். சோழர், பாண்டியர், உடையார்கள் காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.

ஆலயத்தின் சிறப்பம்சம் இறைவன் சந்நிதிக்கு முன்பு இரண்டு பெரிய நந்திகள் உள்ளன. இவற்றில்.ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. இது பற்றி தல வரலாற்றுக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டப் பயிர்களை நந்தி தேவர் பசு மாடு உருவில் மேய்ந்த போது, அதை கண்ட விவசாயி கோபமுற்று, நந்தியின் இரு காதுகளையும் அறுத்து விட்டாராம். மறுநாள் வழிபாட்டிற்கு வந்த மக்கள் நந்தியின் காதுகள் அறுபட்டு இரத்தம் வழிந்தோடுவதைக் கண்டு பதைத்தனர். இப்பாவம் அந்த விவசாயி குடும்பத்தை வழி வழியாக தொடர்வதாகவும் அதன் காரணமாக விவசாயி குடும்பத்தில் ஒருவர் வாய் பேசாதவராகப் பிறப்பது வழி வழியாகத் தொடர்ந்து இருந்ததாம். இதற்குப் பிராயச்சித்தமாக அருகில் வேறொரு நந்தியை பிரதிஷ்டை செய்து பழைய நந்தியை பின்னாலும், புதிய நந்தியை முன்னாலும் வைத்தனர். மறுநாள் காலையில் ஊர் மக்கள் வந்து பார்த்த போது, நந்தி இடம் மாறி பழைய நந்தியே முன்னால் இருந்தது. இறைவன் அசரீரி மூலம் உத்தரவிட்டு பழைய நந்தியையே முன் நிறுத்தச் சொன்னார். விவசாயி குடும்பத்தின் குறையும் நீங்கியதாம்.

உடலில் மரு பிரச்சினை உள்ளவர்கள் இத்தல இறைவனுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாட்களி உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் மருக்கள் மறைந்துவிடும் என்று மக்கள் சொல்கின்றனர். திருவாதிரை விழா நாளில் மக்கள் இறைவனுக்கு மிளகு படைத்து வழிபடுகின்றனர். தட்சினாயணம், உத்தராயணம் இணையும் வேளையில் சூரியகிரணங்கள் இறைவன் திருமேனி மீது விழுவதும் இத்தலத்தின் சிறப்பம்சம்.