தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

அசலதீபேஸ்வரர் திருக்கோவில், குமரி, கொங்கு (மோகனூர்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்குமரி கொங்கு (இன்றைய நாளில் மோகனூர் என்று பெயர்)
இறைவன் பெயர்அசலதீபேஸ்வரர், குமரீசுவரர்
இறைவி பெயர்மதுகரவேணி.
பதிகம்அப்பர் (6-70-9)
எப்படிப் போவது நாமக்கல்லில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் கோவில் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில்
மோகனூர்
மோகனூர் அஞ்சல்
நாமக்கல் வட்டம்
நாமக்கல் மாவட்டம்
PIN - 637015.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குமரி கொங்கு வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

அப்பரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி	(6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை		
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :
திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, 
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, 
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், 
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் .

காவிரி ஆற்றின் வடகரையில் இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி. இறைவன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். இத்தலத்தின் தீர்த்தமாக காவிரி விளங்குகிறது. குமரித்துறை என்று கூறப்படும் அகண்ட காவிரித் தீர்த்தம் கங்கையிலும் புனிதமானதாக போற்றப்படுகிறது. தலமரம் வில்வம். பிராகாரத்தில் விநாயகர், முருகர், காலபைரவர், துர்க்கை, நடராஜர், காளி, மற்றும் 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இறைவன் சந்நிதியில் ஏற்றப்படும் தீபம் எவ்வளவு காற்று அடித்தாலும் அணையாத தீபமாக சுடர் விட்டு எரிவதால் சுவாமிக்கு அசலதீபேஸ்வரர் என்று பெயர்.

தல வரலாறு: மாங்கனி தனக்கு கொடுக்கவில்லையே என்று தாய், தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகனைத் தேடி சுவாமியும் அம்பாளும் தேடி வந்தபோது இவ்வூரில் முருகனைக் கண்டு மகிழ்ந்தனர் எனவும், இதன் அடிப்படையில் இவ்வூருக்கு மகனூர் என்ற பெயர் ஏற்பட்டு நாளடைவில் மருவி மோகனூர் என்று இன்றைய நாளில் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் முற்காலத்தில் குமரிபாளையத்தில் தயிர் விற்று வாழ்ந்து வந்த தேனாயி என்ற பெண்ணிற்கு மகப்பேறு அளித்ததால் சுவாமிக்கு குமரீசுவரர் என்றும், இவ்வூருக்கு மகவனூர் என்றும் பெயர் ஏற்பட்டதாக கொங்குமண்டல சதகம் கூறுகிறது. மகவனூர் பின் நாளில் மோகனூர் என்று மருவிற்று.

ஆடிப்பெருக்கு நாளன்று இத்தலத்தில் காவிரியில் நீராடி இறைவனை வழிபடுவது பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

வைப்புத் தலப் பதிகத்தில் குமரி கொங்கு என்று கூறப்பட்டுள்ளதை குமரி என்பது கன்னியாகுமரியைக் குறிக்கும் என்றும், கொங்கு என்பது கொங்கு மண்டல நாட்டைக் குறிக்கும் என்றும் ஒரு கருத்து உள்ளது. ஆயினும் மோகனூர் தலத்திலுள்ள இறைவனுக்கு குமரீசுவரர் என்று மற்றொரு பெயர் இருப்பதாலும், கோவில் அமைந்துள்ள காவிரித்துறை குமரித்துறை என்று அழைக்கப்படுவதாலும். மோகனூர் தலமே குமரி என்ற வைப்புத் தலமாக கொள்ளப்படுகிறது. குமரி என்ற தலம் கொங்கு நாட்டில் இருப்பதைக் குறிக்க குமரி கொங்கு என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறலாம்.