தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

சொக்கநாதசுவாமி திருக்கோவில், குண்டையூர்


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்குண்டையூர்
இறைவன் பெயர்சுந்தரேஸ்வரர், சொக்கநாதசுவாமி, ரிஷபபுரீஸ்வரர்
இறைவி பெயர்மீனாட்சி
பதிகம்சுந்தரர் (7-20-1)
எப்படிப் போவது பாடல் பெற்ற சிவஸ்தலம் திருக்குவளையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் குண்டையூர் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில்
குண்டையூர்
திருக்குவளை அஞ்சல்
திருக்குவளை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 610204

இவ்வாலயம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும். சிவாச்சாரியார் வீடு அருகிலுள்ளதால் எந்நேரமும் தரிசிக்கலாம்.

குண்டையூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 20-வது பதிகம் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் திருகோளிலி தலத்தைப் பற்றி சுந்தரர் அருளியதாகும் இப்பதிகத்தின் பல பாடல்களில் குண்டையூர் பற்றிய குறிப்பு உள்ளது.

நீள நினைது அடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாள் அன கண் மடவாற் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே, வாள்போலுங் கண்களை உடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன். அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன், எந்நாளும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன்; வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

தலத்தின் சிறப்பு: குண்டையூர் என்ற ஊரில் வேளாள மரபை சேர்ந்தவர் குண்டையூர்க் கிழார். இவர் சுந்தர நாயனார் மீது அதிகமான அன்பு கொண்டவர். அதனால் சுந்தரர் குடும்பத்திற்கு மாத மாதம் செந்நெல், அரிசி, பருப்பு முதலிய மளிகை பொருட்களை அனுப்பி கொண்டு இருந்தார். ஒரு சமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட அந்த ஊரில் நெல் விளைச்சல் அடியோடு பாதிப்படைந்தது. இதனால் சுந்தரரின் குடும்பத்திற்கு எவ்வாறு விளைச்சல் இன்றி நெல் அனுப்புவது என்ற கவலைப்பட்ட குண்டையூர்க் கிழார் இறைவனை எண்ணி நொந்தார். சிவ பெருமான் குண்டயூர் கிழாரின் கனவில் தோன்றி, "கவலைப்படாதே நான் இப்போதே குபேரன் மூலம் உனக்கு போதிய நெல்மணிகளை கொடுக்கிறேன்.“ என்று கூறினார். திடுக்கிட்டு எழுந்த கிழார். வானம் தொடும் அளவு குண்டையூர் முழுவதும் நெல் மலை போன்று குவிந்து இருப்பதைக் கண்டார். கிழார் அழைப்பின் பேரில் குண்டையூர் சென்ற சுந்தரர் நெல்மணி வானத்தை தொடும் அளவில் குவிந்து கிடந்ததைக் கண்டு சுந்தரர் அதிர்ச்சியடைந்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். சுந்தரர் பதிகம் பாடி கேட்டுக்கொண்டதின் பேரில் இறைவன் நெல்லை திருவாருரில் சுந்தரர் வீட்டில் சேர்ப்பித்தார்.

சுந்தரர் நெல் பெற்ற விழா இத்தலத்தில் மாசி மக நாளில் நடைபெறுகிறது. கோயிலில் குண்டையூர் கிழாரின் மூல / உற்சவத் திருமேனிகள் உள்ளன.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அதையடுத்து மூலவர் கருவறைக்குச் செல்லும் இரண்டாவது வாயில் உள்ளது. உள்ளே கருவறையில் மூலவர் ரிஷபபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.கருவறை முன்பும் ஒரு நந்தி உள்ளது. 4 படிகள் ஏறி சற்று உயரமான இடத்தில் கருவறையில் இறைவன் குடி கொண்டுள்ளார். கருவறை முன் மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களாம்பிகை சந்நிதி உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் மகாகணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. பைரவர், சூரியன் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் காட்சியளிக்கின்றனர். குண்டையூர் கிழாருக்கும் இப்பிரகாரத்தில் தனி சந்நிதி உள்ளது.

குண்டையூர் கிழாரின் அவதாரத் தலமான இங்கு அவருக்காக மதுரை சொக்கநாதர் எழுந்தருள்வோம் என்று உறுதி அளித்து அதற்குச் சான்றாக 2 ஆத்தி மரங்களும், ஒரு வன்னி மரமும் நிற்கக் காண்பாய் என்று கூறினார். கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் வலப்புறம் சொக்கநாதர் லிங்க வடிவிலும், இடப்புறம் மீனாட்சியும் எழுந்தருளியுள்ளனர். அம்பாள் அருகிலுள்ள ஆத்தி மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் சுவாமி அருகிலுள்ள ஆத்தி மரம் பூக்கும். ஆனால் காய்க்காது. சுந்தரேஸ்வரரை மக்கள் சொக்கநாத சுவாமி என்றழைக்கின்றனர். சொக்கநாத சுவாமி தேவஸ்தானம் என்றே வழக்கில் உள்ளது;

குண்டையூர் ரிஷபபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் தோற்றம்

கிழக்கு வாயிலில் இருந்து தோற்றம்

நந்தி, பலிபீடம்

ரிஷபபுரீஸ்வரர் சந்நிதி தோற்றம்

அம்பாள் மங்களாம்பிகை சந்நிதி தோற்றம்

மூலவர் ரிஷபபுரீஸ்வரர்

மகா கணபதி

பைரவர், சூரியன்

குண்டையூர் கிழார் சந்நிதி