தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

அருணாசலேஸ்வரர் திருக்கோவில், கீழையில், (கீழையூர்)


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கீழையில் (இன்றைய நாளில் கீழையூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்அருணாசலேஸ்வரர், செம்மலைநாதர்
இறைவி பெயர்வண்டமரும் பூங்குழலாள்
பதிகம்சுந்தரர் (7-12-7)
எப்படிப் போவது நாகப்பட்டிணத்தில் இருந்து திருத்துளைப்பூண்டி செல்லும் பேருந்து சாலையில் கீழையூர் உள்ளது. கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தொலைவிலுள்ள கோவிலுக்கு நடந்தே சென்று வடலாம்.. நாகப்பட்டிணத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் கீழையூர் வழியாகச் செல்கின்றன. திருவாய்மூர் என்ற பாடல் பெற்ற தலத்திலிருந்து வடகிழக்கே 5 கி.மீ. தொலைவில் கீழையில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர்
கீழையூர் அஞ்சல்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 611103

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கீழையில் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகம் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

ஈழநாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே.

பொழிப்புரை :

சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி, கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவையாகும்.

ஆலயம் ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேல் மாடங்களில் முறையே மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்துவாறு விநாயகர், ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி சிவன் பார்வதி, மயில் வாகனத்தில் அமர்ந்தபடி முருகர் காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தினுள் நந்தியெம்பெருமான் உள்ளார். நந்தி உருவம் சற்றே பெரியது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது இத்தலத்திற்கு வந்து 5 சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டனர் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் காட்சி அளிக்கும் மூலவர் அருணாசலேஸ்வரரை அர்ஜுனன் வழிபட்டான் என்று தலபுராணம் கூறுகிறது. மூலவர் நீளமான உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். இறைவனுக்கு செம்மலைநாதர் என்று மற்றொரு பெயரும் வழங்கி வருகிறது. கருவறைச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.

கீழையில் அருணாசலேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் முகப்பு வாயில்
9-11-2013

முகப்பு வாயில் மேல் மாடங்களில் விநாயகர், சிவன் பார்வதி மற்றும் முருகர்