Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இரும்பை மாகாளம்
இறைவன் பெயர்மாகாளேஸ்வரர்
இறைவி பெயர்குயில்மொழி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திண்டிவனத்திலிருந்து கிளியனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலை மார்க்கத்தில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை தாண்டி சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் இரும்பை செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியும் இடத்தில் இரும்பை என்ற பெயர்ப் பலகையும் உள்ளது. இந்த சாலையில் 2 கி.மீ. சென்று மாகாளேஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்த சிவஸ்தலம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து சஞ்சீவிநகர் செல்லும் நகரப் பேருந்து மாகாளேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது. மற்றொரு பாடல் பெற்ற தலமான திருஅரசிலி இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில்
இரும்பை அஞ்சல்
வானூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN 605010

இவ்வாலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
irumbai route map

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து இரும்பை மாகாளம் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தல புராணம்: கடுவெளி சித்தர்: கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டு சிற்றரசன் கடுவெளி சித்தரின் கடும் தவமே மழை இல்லாமைக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தைக் கலைக்க ஒரு தேவதாசி மாதுவை அனுப்பினான். தேவதாசியும் அவரது தவத்தைக் கலைத்தாள். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காற்சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை பார்த்த சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. இதையறிந்த அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கோரினான். சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

தலப் பெருமை: இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன. அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம்.

சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து, தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை, பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் "மகாகாளநாதர்" என்ற பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் வலதுபுறம் விநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சுயம்புலிங்க வடிவில் மாகாளேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கியும், இறைவி குயில்மொழிநாயகி தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.ஆலயம் திருப்பணி செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது. பிராகார மேற்குச் சுற்றில் கருவறைக்குப் பின்புறம் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து ஆறுமுகர் காட்சி அளிக்கிறார். இச்சந்நிதிக்கு அருகில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இச்சந்நிதியில் நின்று கொண்டு இறைவன், அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது. கோவில் கிழக்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி சூரியன், சந்திரன் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிராகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் ஆஞ்சனேயருக்கும் சந்நிதி உள்ளது.

பிராகார சுற்றுச் சுவர் உட்புறம் முற்றிலும் விதவிதமான உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன். அங்கங்கே ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. கருவறை முன்புறச் சுவர் முழுவதும் செப்புத் தகட்டால் வேயப்பட்டு தங்கமுலாம் பூசியது போன்று பளபளப்புடன் திகழ்கிறது. துவாரகாலகர்கள், மாகாளர் உருவம் ஆகியவை செப்புத் தகட்டால் வேயப்பட்டிருப்பதைக் காணலாம்.

Top
மாகாளேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில்
கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்
ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்
காலபைரவர் சந்நிதி
நவக்கிரக சந்நிதி
பிராகார சுற்றுச் சுவரில் அலங்கார உருவங்கள்
செப்புத் தகட்டால் வேயப்பட்ட கருவறை முன்புறச் சுவர்
செப்புத் தகட்டால் வேயப்பட்ட கருவறை சுவரில் கடுவெளி சித்தர் உருவம்
மூலவர் கருவறைக்குச் செல்லும் வாயில்