கோளிலிநாதர் கோவில், திருக்கோளிலி
தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருக்கோளிலி (தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது) |
இறைவன் பெயர் | கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | வண்டமர் பூங்குழலி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன. |
ஆலய முகவரி | அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில் திருக்குவளை திருக்குவளை அஞ்சல் திருக்குவளை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN 610204 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
கோவில் விபரங்கள் திருக்கோளிலி தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.
கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்திற்கு எதிரே மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன
இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய aற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.
நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே. வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய் விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே. பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய் மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே கோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே. சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ கொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே. முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே பல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான் அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே. குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய் பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே. எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும் வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே செம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான் அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே. அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான் பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள் குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே. பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங் கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான் தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே. கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை நல்லவர் தாம்பர வுந்திரு நாவல வூரனவன் நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந் தேத்திய பத்தும்வல்லார் அல்லல் களைந்துல கின்அண்டர் வானுல காள்பவரே.
என்று சுந்தரர் பதிகம் பாடி கேட்டுக்கொண்டதின் பேரில் இறைவன் நெல்லை திருவாருரில் சுந்தரர் வீட்டில் சேர்ப்பித்தார்.