Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நடுத்தறியப்பர் கோவில், திருகன்றாப்பூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்நடுத்தறியப்பர், நடுத்தறிநாதர்,
இறைவி பெயர்மாதுமை நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து அங்குப் பிரியும் சாலையில் மருதூர் வந்து, அதற்கு அடுத்துள்ள கோயில் கண்ணாப்பூர் கூட்டுரோடு என்று கேட்டு அவ்விடத்தையடைந்து அங்கு இடப்புறமாகப் பிரியும் உள்சாலையில் 1 கி.மீ. சென்றால் தலத்தையடையலாம். (கீழ கண்ணாப்பூர் என்ற ஊர் ஒன்றுள்ளது. பாடல் பெற்ற தலம் அதுவன்று. எனவே கோயில் கண்ணாப்பூர் என்று கேட்க வேண்டும்). திருவாரூரிலிருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கோயில் கண்ணாப்பூர் நிறுத்தத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.
ஆலய முகவரி அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில்
கோயில் கண்ணாப்பூர்
கோயில் கண்ணாப்பூர் அஞ்சல்
வழி வலிவலம் S.O.
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு: சைவ சமயத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி வைணவன் ஒருவனுக்கு மனைவியானாள். புகுந்த வீட்டில் மாமியார் வீட்டார் காணாதவாறு சிவலிங்க வழிபாடு செய்து வந்தாள். அவள் கணவன் அதுகண்டு மனைவி வழிபாடு செய்து வந்த அந்த இலிங்கத்தைக் கிணற்றில் எறிந்து விட்டான். அப்பெண் வேறுவழியின்றி வீட்டின் பின்புறம் கன்று கட்டியிருந்த தறியையே (ஆப்பு) சிவபெருமானாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதையும் கண்டு, கோபித்து அத்தறியைக் கோடரியால் வெட்டினான். தறி இரண்டாக பிளந்து அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அவன் மனைவியின் பக்தியை உலகத்தவரும், அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் லிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார். இறைவன் அந்த ஆப்பில் இருந்து வெளிப்பட்டு சைவப் பெண்ணிற்கு அருள்புரிந்த தலம் திருகன்றாப்பூர். (கன்று + ஆப்பு + ஊர்). சைவப்பெண்ணும், அவள் கணவனும் சிவலோகம் அடைந்தனர். கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் கன்றாப்பூர் என வழங்கப்பெற்றது. இந்த லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினாலும் தறியிலிருந்து தோன்றியதால் இறைவன் நடுத்தறிநாதர் எனப்பட்டார். அந்த கன்றுக்குட்டியின் நடுதறி இருந்த இடமே இன்று நடுத்தறிநாதர் கோயிலாக விளங்குகின்றது. மூல லிங்கத்தின் பாணப் பகுதியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.

கிழக்கு நோக்கிய இக்கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. இவ்வாலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம், நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறு, விநாயகர், அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சந்நிதிகள் உள்ளன. சனிபகவானை அடுத்து சம்பந்தர், அப்பர் இருவரும் காட்சி தருகின்றனர்.

பிரகாரம் வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் அம்பாள் சந்நிதி உள்ளது. நேரே மூலவர் நடுத்தறியப்பர் தரிசனம் தருகிறார். மூலவர் சதுரபீடம் ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா
மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்
நாதனே யென்றென்று பரவி நாளும்
நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்
காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பா யென்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதி யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 

எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே அவரவரைக் கண்ட போது
உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு மிகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தி
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. 

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தா யென்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியா யென்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தா யென்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலா லூன்றி
முனிந்தவன்றன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட் டருள்கொடுத்த மூர்த்தி யென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

திருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்) நடுத்தறியப்பர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு கோபுரம்


சுவாமி கருவறை விமானம்


நவக்கிரக சந்நிதி


மூலவர் நடுத்தறிநாதர்


கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி


வள்ளி தெய்வானையுடன் முருகர்


நந்தி, பலிபீடம்


தல வரலாற்றை விளக்கும் சித்திரம்


ஆலய பிரகாரத்திலுள்ள மற்ற மூர்த்தங்கள்


ஆலய பிரகாரத்திலுள்ள மற்ற மூர்த்தங்கள்