Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நீள்நெறிநாதர் கோவில், திருத்தண்டலைநீள்நெறி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருத்தண்டலைநீள்நெறி (தற்போது தண்டலச்சேரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்நீள்நெறிநாதர், ஸ்திர புத்தீசுவரர்
இறைவி பெயர்ஞானாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 4.5 கி.மி. தொலைவில் தண்டலச்சேரி கிராமம் இருக்கிறது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோவில்
தண்டலச்சேரி கிராமம்
வேளூர் அஞ்சல்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614715

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
thandalai neelneri route map

திருத்துறைபூண்டியில் இருந்து திருத்தண்டலை
நீள்நெறி செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

தண்டலை என்பது இக்காலம் தண்டலைச்சேரி என வழங்கப் பெறுகின்றது. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் ஊரின் பெயர் தண்டலை. இங்குள்ள கோயிலின் பெயர் நீள்நெறி. கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரனமாக, யானை ஏறாத, ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. அத்தகைய ஆலயங்களில் திருத்தண்டலைநீள்நெறி கோவிலும் ஒன்றாகும். இந்த பழமையான சிவன் கோயில் காலத்தின் கோலத்தால் சிதைந்துவிட்டது. பிற்காலத்தில் தேவகோட்டை ராம. அருஅரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் இப்போதுள்ள கோயிலை கற்றளியாக கட்டித் தந்துள்ளார்கள். விமானங்கள் சுதை வேலைப்பாடுடையவை.

கோவிலுக்கு ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள் நுழைந்தால் முன் உள்ள முகப்பு மண்டபத்தில் கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடி மரமில்லை. கொடிமர விநாயகர் அடுத்து பலிபீடம், நந்தி உள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன.

கருவறை முன்மண்டபத்தில் கோச்செங்கட்சோழன், அரிவாட்டாய நாயனார், நால்வர் மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. துவாரபாலகர்களைத் தொழுது, விநாயகரை வணங்கி உட்செல்லும் போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது, இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடராஜர், நால்வர், மனைவியுடன் அரிவாட்டாய நாயனார், கோச்செங்கட்சோழன் ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை. நடராஜ சபை வலதுபுறம் உள்ளது. சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள மூலவர் சிவலிங்கம் அழகான சிறிய திருமேனி. அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை சந்நிதி தனி விமானத்துடன் உள்ளது.


அரிவாட்டாய நாயனார், அவர் மனைவி

அரிவாட்டாய நாயனார்: தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது) வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு "அரிவாட்ட நாயனார்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.

குஷ்ட நோய் தீர்க்கும் தலம்: கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் சிவபெருமானுக்கு 70 மாடக்கோயில்கள் கட்டியவன். ஒரு முறை இவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. நோய் தீர இவன் பல திருத்தலங்களுக்கு சென்றும் பயனில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி,"கல்மாடு புல் திங்கும் தலத்திற்கு சென்று வணங்கினால் உன் நோய் தீரும்"'என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான். இத்தலத்தில் வழிபாடு செய்ய வந்தபோது, சிவனுக்கு அணிவிக்க அருகம்புல்லால் ஆன மாலையை கையில் ஏந்தி வந்தான். அப்போது சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி அந்த அருகம்புல் மாலையை இழுத்து தின்றது. இதைக்கண்ட மன்னனுக்கு சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனது குஷ்ட நோயும் நீங்கியது. மனம் மகிழ்ந்த மன்னன் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து இறைவனை வழிபட்டான். இத்தலத்தில் நந்தி புல்லைத் தினபதற்காக கழுத்தை திருப்பிய நிலையில் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் சிதைந்து போன 3 பாடல்கள் போக மீதியுள்ள 8 பாடல்கள்.

1. விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.

2. இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்
திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே. 

3. பரந்த நீலப் படரெரி வல்விடங்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.

4. தவந்த என்புந் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே. 

11 பாடல்கள் கொண்ட இப்பதிகத்தின் 
    5, 6, 7-ம் பாடல்கள் சிதைந்து போயின. 	

8. இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்
சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.

9. கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே. 

10. கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே. 

11. நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.

திருத்தண்டலைநீள்நெறி நீள்நெறிநாதர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்


முகப்பு வாயில் கடந்து பிரகாரம்


சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம்


வெளிப் பிரகாரம்


பிரகாரத்தில் நவக்கிரகங்கள்


நால்வர் சந்நிதி


நூபுர கங்கை புண்ணிய தீர்த்தக் கிணறு


வள்ளி தெய்வானையுடன் முருகர்