Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கற்பகநாதர் கோவில், திருக்கடிக்குளம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கடிக்குளம் (தற்போது கற்பகநாதர் குளம் என்றும் கற்பகனார் கோவில் என்றும் வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்கற்பகநாதர்
இறைவி பெயர்மங்களநாயகி, சௌந்தரநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி இத்தலத்திற்கு உள்ளது. திருஇடும்பாவனம் இத்தலத்திலிருந்து மேற்கே 1 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில்
கற்பகநாதர்குளம்
கற்பகநாதர்குளம் அஞ்சல்
குன்னலூர். S.O.
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 614703

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: சண்முகசுந்தரம், ஆலய அர்ச்சகர், கைபேசி: 9943852180
tirukadikulam route map

திருத்துறைபூண்டியில் இருந்து திருக்கடிக்குளம்
செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபம் உள்ளது. கோவிலுக்கு வடபுறம் விநாயக தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் மாடங்களில் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர். உள்பிராகாரத்தில் நால்வர், தலவிநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, தலமரம் பலா, சனீஸ்வரன், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக எட்டுப் பட்டைகளுடன் எழிலாகக் காட்சி தருகிறார். இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. நாடொறும் நான்கு கால வழிபாடுகள். ஆனித்திரு மஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், திருவாதிரை, தைப்பூசம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகிறது. கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இவரின் சந்நிதி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. அருகில் கோதண்டராமர் கோவிலும் உள்ளது.

கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். திருஇடும்பாவனம் தலத்தைப் போன்றே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய திருக்கடிக்குளமும் ஏற்ற தலம். ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்று தலபுரானம் கூறுகிறது.

திருக்கடிக்குளம் கற்பகநாதர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்தின் 3 நிலை இராஜ கோபுரம்
கோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபம்
கோபுர வாயில் கடந்து மகாமண்டபம்

மூலவர் கற்பகநாதர்
அம்பாள் மங்களநாயகி
வள்ளி தெய்வானை சுப்பிரமணியர்

நால்வர் சந்நிதி
கோவிலுக்கு வெளியே மாங்கனி (கற்பக) விநாயகர் சந்நிதி
தல விருட்சம் பலாமரம்

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள
பதிகம் 2-ம் மிருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே. 

விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும் வள்ளலை மருவித்தங்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே. 

பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியதள் அழல்நாகந்
தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை இடும்பைவந் தடையாவே. 

நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பாருங்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே. 

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே. 

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே. 	

குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே. 

மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே. 

நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன்
சீரி னார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே. 

தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வந் துலவிய கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய் இறைவனோ டுறைவாரே.