Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கோனேசுவரர் கோவில், திருக்குடவாயில்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்குடவாயில் (தற்போது குடவாசல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்கோனேசுவரர்
இறைவி பெயர்பெரியநாயகி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களிலிருந்தும் குடவாசல் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பெருவேளூர், திருதலையாலங்காடு என்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அருகில் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு கோனேசுவரர் திருக்கோயில்
குடவாசல்
குடவாசல் அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612601

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Kodavasal route map

குடவாசல் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Yahoo Maps

கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து சிவபெருமான் காத்தார்; குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார்.. குடம் மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் (ஆதிகும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலையநல்லூராகும். குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல்..

இத்தலம் சங்ககாலச் சிறப்பும் பழைமையும் வாய்ந்தது. சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே சிறை வைத்தான் என்னும் செய்தியை புறநானூறு தெரிவிக்கிறது. இதிலிருந்து அன்றைய குடவாயில், சோழப்பேரரசின் சிறைக்கோட்டமாக இருந்தது என்று தெரிய வருகிறது. குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சங்ககாலத்தில் குடவாயில் சோழர்களின் கருவூல நிலையமாக இருந்ததென்று குடவாயில் கீரத்தனார் பாடிய அகநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.

சங்ககாலச் சிறப்பும் பழைமையும் பெற்ற இத்தலம் கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியுள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு எதிரில் அமிர்த தீர்த்தம் உள்ளது. இதன் கரையில் ஆதிவிநாயகர் சந்நிதி உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் தெற்கு நோக்கிய பெரிய நாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள். அம்பிகையே பிருகத்துர்க்கையாக வழிபடப் பெறுவதால் கோயிலில் தனி துர்க்கையில்லை.

உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் இடும்பன், தண்டபாணி, கலைமகள் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி, பைரவர், சனீசுவரர் முதலிய சிலாரூபங்கள் வரிசையாகவுள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் உள்ளது. சண்டேசுவரர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. நடராசசபை அழகானது. நடராசப் பெருமானின் அவிர்சடை அழகு நம் மனத்தை விட்டகலாது. நடராஜப் பெருமானின் திருமேனியின் பீடத்தில் 10 -11 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் எழுத்துக்கள் வடிவில் "களக்காடுடையார் மாலை தாழ்மார்பன்" என எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் எழுத்துக்களுடன் மத்தியில் இருகரங்கற் கூப்பிய நிலையில் அடியவர் ஒருவரின் உருவமும் உள்ளது. இராஜராஜ சோழனின் காலத்துக் கலைப்பாணியை உடைய இத்திருமேனி இத்தலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள களக்காட்டில் வாழ்ந்த 'மாலைதாழ் மார்பன் என்பவரால் வடித்து வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. சந்நிதிக்கு வெளியில் பக்கவாட்டிலுள்ள காசிவிசுவநாதர் சந்நிதியில் சிவலிங்கத் திருமேனி செம்மண் நிறத்தில் காணப்படுகிறது. இருபத்து நான்கு படிகளைக் கடந்து மேலே சென்றால் மூலவர் கோணேசுவரர் மேற்கு நோக்கிய சந்நிதியில் பெரிய சிவலிங்கத் திருமேனி உருவில் எழுந்தருளியுள்ளார். இறைவன் திருமேனியில் கருடன் தீண்டி வழிபட்ட சுவடுகள் உள்ளன.

திருப்புகழ் தலம்: இத்தல முருகன் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். திருப்புகழில் இரு பாடல்கள் உள்ளன உள் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில், மிகவும் பிரபலமான குடவாயில் குமரன் சந்நிதி உள்ளது.. மயில் மண்டபம், மகா மண்டபத்துடன் கூடிய சந்நிதியில், வள்ளி- தெய்வானையுடன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் உடையவராய் இவர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

தல வரலாறு: காச்யப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன். மகாவிஷ்ணுவிற்கு வாகனமாகவும், பரம பக்தனாகவும் இருந்து "பெரிய திருவடி" என்று புகழ் பெற்றவர். ஒரு சமயம் கருடனும், அவன் தாய் விநதையும் மூத்த மனைவியின் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயின் அடிமைத்தனத்தை போக்குவதற்காக கருடன் பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கோணேசப் பெருமான் அருளாணைப்படி கருடன் இத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர் அமிர்தலிங்கமானார். அமிர்த துளிகள் சிந்தியதால் ஆலயத்திற்கு எதிரிலுள்ள தீர்த்தம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று.

திருணபிந்து முனிவர் பூஜிக்க இறைவன் திருக்குடத்திலிருந்து வெளிப்பட்டு முனிவர் நோயினை நீக்கயருளிய தலம் இதுவாகும். அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். அவர் திருவுருவங்கள் இங்குள்ளன.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான 2 பதிகங்களும் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒரு பதிகம் கீழே தரப்பட்டுள்ளது. சம்பந்தர் இக்கோவிலை பெருங்கோவில் என்று ஒவ்வொரு பாடலிலும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே. 

ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவாயில் தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே. 

கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான் குடவாயில் தனில்
நிலையார் பெருங்கோயில் நிலாயவனே. 

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவாயில் தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே. 

என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவாயில் தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே. 

அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவாயில் தனில்
நிலைசேர் பெருங்கோயில் நிலாயவனே. 

அறையார் கழலன் னமலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவாயில் தனில்
நிறையார் பெருங்கோயில் நிலாயவனே. 

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவாயில் மன்னும்
வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே. 

பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
குயிலன் குழகன் குடவாயில் தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே. 

கடுவாய் மலிநீர் குடவாயில் தனில்
நெடுமா பெருங்கோயில் நிலாயவனை
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ் வல்லவர் நல்லவரே. 

திருக்குடவாயில் கோனேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


ஆலயத்திற்கு எதிரிலுள்ள அமிர்த தீர்த்தம்


ஆலயத்தின் முகப்பு வாயில்


மூலவர் கோனேசுவரர்


சப்தமாதர்கள்

திருக்குடவாயில் கோனேசுவரர் ஆலயம் புகைப்படங்கள்


தல விருட்சம் வாழை


நடராஜர், சிவகாமி


மாடக் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள்


சுவாமி விமானம்