Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருதலையாலங்காடு
இறைவன் பெயர்ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்
இறைவி பெயர்ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மி. தொலைவிலும் திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
தலையாலங்காடு
செம்பங்குடி அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612603

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம்.

செருக்குற்றுத் திரிந்த தாருகாவன முனிவர்கள் இறைவனின் பெருமை உணராது, அவரை அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வி நடத்தினர். ஈசனோ அவற்றிலிருந்து புறப்பட்ட புலியைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்து வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத் தாங்கினார். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கின்றன என்பதையும் உணர்த்தி அருள் புரிந்தார். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம் இதுவாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் "தலையாலங்கானம்" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றான். இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி ஆனந்தச் சூழலில் அமைதியாக அமைந்துள்ளது.

உயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திரு மடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்குண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது. செங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும்.

இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தல விருட்சமான பலா மரத்தைக் கண்டு வணங்கலாம். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்க தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் ஸ்வாமிமீது விழுகின்றன.

இத்தல தீர்த்தக் குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, சகல வியாதிகளும் தீரும். வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களும் மறைவது கண்கூடு. முன்னோர்களது சாபங்கள் அகலும். இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரி நாசமடைவர். இத்தல ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப் பேறு கிட்டும். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இத்திருத்தலத்தினை கால்களால் மிதிப்பதைப் பாவமாகக் கருதி, கரங்களால் ஊன்றி வந்து வழிபட்டு பதிகம் பாடித் துதித்துள்ளார். இறைவன் தை அமாவாசை தினத்தில், ஆலயத்தின் வடபிராகாரத்தில் உள்ள பலா மரத்தடியில் அப்பருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார். அப்பர் இத்தலம் மீது பத்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளது மட்டுமின்றி பிற திருத்தலப் பதிகங்களிலும் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.

1. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே.  

2. அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை
அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்
புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே.  

3. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே. 
 
4. சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே.  

5. கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே. 
 
6. விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலக மாள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே.  
7. விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை அந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் றன்னை
சாராதே சாலநாள் போக்கினேனே. 
 
8. கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே. 

9. பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே.  

10. கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே.  

திருநாவுக்கரசர் இத்தல பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தலையாலங்காடு இறைவனை அடையாமல் வீணாய் நாட்களைப் போக்கினேனே என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.

தலையாலங்காடு ஆலயம் புகைப்படங்கள்


மூலவர் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர்


தல விருட்சம் பலாமரம்