தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்
தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | பட்டீச்சரம் (தற்போது பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது) |
இறைவன் பெயர் | தேனுபுரீஸ்வரர் |
இறைவி பெயர் | ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம். |
ஆலய முகவரி |
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் பட்டீஸ்வரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612703 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. திருமலைராயனாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.
தலத்தின் மற்ற சிறப்புகள்:- பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.
- விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.
- வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.
- மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
- இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது.
- வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.