Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆப்புடையார் கோவில், திருஆப்பனூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஆப்பனூர்
இறைவன் பெயர்ஆப்புடையார், அன்னவிநோதர், விடபேஸ்வரர்
இறைவி பெயர்குரவங்கமழ் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது இந்த சிவஸ்தலம் கோவில் மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியான சிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு ஆப்புடையார் திருக்கோவில்
ஆப்புடையார் திருக்கோவில் அஞ்சல்
மதுரை
PIN - 625002

தல வரலாறு: சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் ஒரு சிவபக்தன். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை வேட்டையாட காட்டிற்குச் சென்ற அரசன் வேட்டையாடிய களைப்பால் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்த கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, "மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே,"' என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல, அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். சிவபூஜை செய்யாமல் உணவருந்திய வருத்தத்தில் இறைவனிடம் தான் இதுநாள் வரை இறைவனை பூஜித்தது உணமையானால் இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அப்படி இல்லாவிட்டால் உயிர் துறக்கவும் தயாரானான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்புற்றது.

ஒருமுறை பாண்டிய நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவின்றி தவித்தனர். ஆப்புடையார் கோவில் அர்ச்சகர் சிவபூஜைக்காக சிறிது பயிர் செய்து நைவேத்யம் செய்து வந்தார். ஊர் மக்கள் உணவின்றி வாடும் போது இறைவனுக்கு நைவேத்யமா என்று சிலர் அர்ச்சகரை துன்புறுத்தினர். எஓவில் அர்ச்சகர் வருத்தப்பட்டு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அசரீரியாக வைகை ஆற்று மணலை உலையிலிட்டு சமைக்கும் படியும் அது அன்னமாக மாறும் என்றும் அர்ச்சகரிடம் கூறினார். அர்ச்சகரும் அவ்வாறே செய்து ஊர் மக்களின் பசியைப் போக்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு "அன்னவிநோதன்" என்ற பெயர் ஏற்பட்டது.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு கோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் ரிஈபாரூடராக சிவன், பார்வதி, முருகர் மற்றும் விநாயகம் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழியே உள்ளே நுழைத்தவடம் காணப்படமு மண்டபத்திர் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதிக்கும், சுவாமி சந்ந்திக்கும் இடையில் சுப்பிரமணியருக்கு சந்நிதி உள்ளது. இத்தகைய அமைப்பை சோமஸ்கந்த அமைப்பு என்பர். பிரகாரம் சுற்றி வரும்போது தலவிருடசம் வன்னி மரத்தடியில் விநாயகர் தரிசனம் தருகிறார். வள்ளி தெய்வானை அருகிலிருக்க முருகர் மயில் அமர்ந்து காட்சி தருகிறார்.

இத்தலத்தில் கல் சிற்பமாக நடராஜர், சிவகாமி, அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கின்றனர். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சிலாவுருவங்கள் இத்தலத்தின் சிறப்பம்சம். உற்சவர் நடராஜரும் சிவகாமியுடன் உள்ளார். மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

திருஆப்பனூர் ஆப்புடையார் கோவில் புகைப்படங்கள்


ஆலயத்தின் முகப்பு வாயில்



சுவாமி சந்நிதி முன் நந்தி



சுவாமி சந்நிதி முன் மண்டபம்



ஆலயத்தின் உள்ளே



வள்ளி தெய்வானையுடன் முருகர்

திருஆப்பனூர் ஆப்புடையார் கோவில் புகைப்படங்கள்


தலவிருட்சம் வன்னி மரம்



முருகர் - தூண் சிற்பம்



முருகர் - தூண் சிற்பம்

இத்தலத்திற்கான சம்பந்தரின் பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் 2வது பாடலில் இறைவியை குரவங்கமழ் குழலாள் என்று குறிப்பிடுகிறார்.

முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்
பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்
பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

தகர மணியருவித் தடமால்வரை சிலையா
நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 

கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 

செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை
ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 

அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.